search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோப் கார்"

    • தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது.
    • பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது.

    புலிவலம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோளிங்கரில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இதில் 1,305 படிகள் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலை மீது ஏறிச்சென்று தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

    அவர்கள் எளிதில் மலைக்கு சென்று யோக நரசிம்மரை தரிசிக்கும் வகையில் ரோப்கார் அமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதன்பேரில் தமிழக அரசு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணியை தொடங்கியது. இப்பணிகள் முழுவதுமாக முடிந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்கார் சோதனை ஓட்டமும் நடந்தது.

    மேலும் ரோப்கார் அமைவிடத்தில் அமைச்சர் ஆர். காந்தி தலைமையிலான நன்கொடையாளர்கள் மூலம் ரூ.11 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வந்தது.

    இந்த பணிகளும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ரோப்கார் அமைவிடத்தில் ஆய்வு செய்தனர்.

    அப்போது விரைவில் ரோப்கார் பக்தர்களின் பயன்பாட்டிற்கு தொடங்கப்படும் என தெரிவித்தனர்.

    லட்சுமி நரசிம்மர் மலைக் கோவிலின் ரோப்கார் சேவையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    சென்னையிலிருந்து சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு செல்ல 105 கிலோமீட்டர் தூரம் இருக்கிறது.

    சென்னையில் இருந்து ரெயில் மூலம் அரக்கோணம் வந்தால் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மரை எளிதில் தரிசனம் செய்யலாம்.

    இதனால் அதிகமான பக்தர்கள் சென்னையில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரூ.13 கோடி மதிப்பில் 460 மீட்டர் அளவுள்ள ஒரு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.
    • வரலாற்றிலேயே 2 ஆண்டுகளில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் தான்.

    கோவை:

    கோவை கணுவாய் அடுத்துள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார்.

    அவர் கோவிலுக்கு மலைஏறி சென்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார்.

    மேலும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் இது தொடர்பான தகவல்களையும் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு அமைந்தவுடன் தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பக்தர்கள் வசதிக்காகவும், முதியோர்கள் மற்றும் உடல் உபாதை உள்ள பக்தர்களின் வசதிக்காகவும் ரோப்கார் மற்றும் தானியங்கி லிப்ட் அமைத்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று கோவை அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டோம். 560 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு ரூ.13 கோடி மதிப்பில் 460 மீட்டர் அளவுள்ள ஒரு ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று ஏற்கனவே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தியக்கூறுக்கான அறிக்கைகள் வந்த பின்னர் ரோப்கார் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கும்.

    இதேபோன்று திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, இடும்பன் மலை, திருப்பரங்குன்றத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில்களுக்கும் ரோப்கார் வசதி ஏற்படுத்தி தர உள்ளோம்.

    கரூர் அய்யர்மலை, சோழிங்கநல்லூர் கோவில்களில் ரோப் கார் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    கோவை மருதமலையில் தானியங்கி லிப்ட் அமைப்பதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மலை கோவில்களிலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்பேரில் அந்தந்த பகுதிகளில் மலைக்கோவில்களில் அங்குள்ள அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

    தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே 2 ஆண்டுகளில் 922 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது திராவிட மாடல் ஆட்சியில் தான்.

    அதேபோன்று தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.5135 கோடி மதிப்பிலான 5335 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசானது இறையன்பர்களுக்கு இறைபற்று ள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியான ஆட்சியாக உள்ளது.

    விலங்குகள் அதிகம் நடமாடும் கோவில் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு காடுகளில் இருந்து வெளியே வராதபடி முள்வேலிகள் அமைக்க ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் பேரூரில் நடந்த நொய்யல் திருவிழாவில் பங்கேற்றார். பின்னர் தண்டுமாரியம்மன், லட்சுமி நரசிம்மர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப் கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றார்.
    • மின்சாரம் தடைபட்டதால் ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் மலைக்கோயிலுக்கு மேலே செல்வதற்காக அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாகச் சென்றார்.

    அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மேலே சென்ற ரோப் கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

    ரோப் காரில் நிதியமைச்சருடன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர். இரண்டு நிமிடத்துக்கு பிறகு மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது.

    இதையடுத்து, மலைக்கோயிலுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனிமுருகனை தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கபட்டது. சாமி தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ரோப் கார் வழியாகவே அமைச்சர் கீழே இறங்கினார்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற ரோப் கார் மின்சார தடையால் பாதி வழியில் அந்தரத்தில் தொங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 3 நிமிடத்தில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி செல்லலாம் என்பதால் ரோப் காரில் செல்ல பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ரோப் கார் இயங்காததால் நீண்ட நேரம் மின் இழுவை ரெயில் நிலையத்தில் காத்திருந்து மலைக்கோவில் செல்லும் நிலை ஏற்பட்டது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப் கார் மூலம் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    3 நிமிடத்தில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி செல்லலாம் என்பதால் ரோப் காரில் செல்ல பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஒரு பெட்டியில் 4 பேர் வீதம் 16 பேர் பயணிக்கலாம். எடையை பொருத்து நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற ரோப் கார் பெட்டி பாறையில் உரசி சேதமானது. அதிக பாரம் ஏற்றியதால் ரோப் கார் பாறையில் உரசியது தெரிய வந்தது. இதனால் பராமரிப்பு பணிக்காக நேற்று ரோப் கார் நிறுத்தப்பட்டது.

    விடுமுறை நாளில் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்திருந்தனர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ரோப் கார் இயங்காததால் நீண்ட நேரம் மின் இழுவை ரெயில் நிலையத்தில் காத்திருந்து மலைக்கோவில் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் சில பக்தர்கள் படிப்பாதை வழியாக ஏறிச் சென்றனர். ரோப் காரில் ஏற்கனவே பழைய பெட்டிகள் கழற்றி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மீண்டும் பொருத்தி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்றும் ரோப் கார் இயங்காது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மெரினா கடற்கரையில் அமையும் ரோப் கார் திட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி பாய்ண்ட் வரை அமைக்கப்படும்.
    • நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரெயில் நிலையம் பகுதி வரை ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகரை சிங்கார சென்னையாக மாற்ற வேண்டும் என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றாகும்.

    அவரது இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில் சென்னையை அழகுபடுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதற்கான பரிந்துரைகளை பல்வேறு துறைகளும் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளன.

    அதன் ஒரு பகுதியாக சென்னையில் ரோப் கார் இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. சென்னையில் எங்கெங்கு ரோப் கார் திட்டத்தை அமல்படுத்தலாம் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் மெரினா கடற்கரையில் ரோப் கார் இயக்கினால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், என்ஜினீயர்களும் முடிவுக்கு வந்துள்ளனர்.

    சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களை சந்தித்து பேசியபோது, புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்று சில கவுன்சிலர்கள் ரோப் கார் திட்டம் பற்றி தெரிவித்தனர். இதையடுத்து மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டத்துக்கு விரிவான பரிந்துரை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் அமையும் ரோப் கார் திட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி பாய்ண்ட் வரை அமைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இரு இடங்களுக்கும் இடையே உள்ள தொலைவு 3 கி.மீ. ஆகும். 3 கி.மீட்டருக்கு ரோப் காரில் செல்லும்போது சுற்றுலா பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

    இதை தவிர நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரெயில் நிலையம் பகுதி வரை ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் மீது ரோப் கார் இயக்கும் திட்டமும் உள்ளது. இவற்றில் முதலில் எந்த திட்டத்துக்கு அனுமதி கொடுப்பது என்பது பற்றி தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது.

    பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகளிடமிருந்து அனுமதி கடிதம் கிடைக்காததால் சபரிமலைக்கு ரோப் கார் தூண்கள் அமைக்க மண் பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டப்படி பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு ரோப் கார் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. ரோப் கார் அமைக்கப்பட்டால் கோவிலுக்கு தேவையான பொருட்கள் ரோப்கார் மூலம் வேகமாக கோவிலுக்கு கொண்டு சென்று விடலாம் எனவும் கூறப்பட்டது.

    இதையடுத்து பம்பை-சன்னிதானம் இடையே ரோப் கார் அமைக்க ஏதுவான பாதை ஆய்வு செய்யப்பட்டது.

    ரோப் கார் செல்லும் பாதை கேரள வனத்துறை மற்றும் பெரியார் புலிகள் சரணாலயம் பகுதி வழியாக அமைக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கான ஆய்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து கேரள வனத்துறை மற்றும் பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது.

    கேரள வனத்துறை அனுமதி வழங்கி விட்ட நிலையில் பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகள் இதுவரை ரோப் கார் அமைப்பதற்கான அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையே ரோப் கார் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்ய கொல்கத்தா குழுவினர் கடந்த 11-ந்தேதி கேரளா வந்தனர்.

    சில நாட்கள் தங்கியிருந்த அவர்கள் பெரியார் புலிகள் சரணாலய அதிகாரிகளிடமிருந்து அனுமதி கடிதம் கிடைக்காததால் ரோப் கார் தூண்கள் அமைக்க மண் பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் கொல்கத்தா திரும்பினர்.

    சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்காக 14-ந்தேதி மாலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தினமும் விசே‌ஷ பூஜைகள் நடந்தன. ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டமும் அலைமோதியது.

    கோவிலுக்கு இளம்பெண்கள் வருவார்கள் என்று தகவல் வெளியானதால் மலை பாதையில் இந்து அமைப்பினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை அடைக்கப்படுகிறது. இன்று சகஸ்கரகலசாபிஷேகம், அத்தாள பூஜை நடக்கிறது.

    நாளை இரவு 10.30 மணிக்கு ஐயப்பனுக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது.


    ×